மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கே தொலைவில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் எழுந்த சுனாமி அலைகள் சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை அமெரிக்க மேற்குக் கரையை எட்டியுள்ளன.
ஹவாயியின் கடலோரப் பகுதிகளில் வசிப்போர் உயரமான கட்டடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அமெரிக்கக் கடலோரக் காவல்துறை துறைமுகங்களை விட்டு வெளியேறுமாறு கப்பல்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
“உடனடியாகச் செயல்படுங்கள்! பெருஞ்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன,” என்று ஹானலூலு அவசரகால நிர்வாகத் துறை சமூக ஊடகத்தில் தெரிவித்தது.
ஹவாயி ஆளுநர் ஜோஷ் கிரீன் தீவைக் கடும் அலைகள் இதுவரை எட்டவில்லை என்றார். இருப்பினும் மாவீத் தீவிற்கு வந்துபோகும் விமானச்சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானச்சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கலிஃபோர்னியாவின் வட பகுதியில் உள்ள கிரெசன்ட் நகரையும் சுனாமி அலைகள் சென்றடைந்தன. ஆரெகன் எல்லையில் அமைந்திருக்கும் கேப் மெண்டசீனோவில் சுனாமி எச்சரிக்கை நீடிக்கிறது.
இந்நிலையில் பிலிப்பீன்ஸ் அதன் கடலோரப் பகுதிகள் சிலவற்றில் விடுத்த சுனாமி எச்சரிக்கைகளை மீட்டுக்கொண்டது.