கோலாலம்பூர்: மலேசியர்கள் ரமலான் சந்தைகளுக்கும் நோன்புத் துறக்கும் நிகழ்வுகளுக்கும் கூட்டங்கூட்டமாகச் செல்லும் இவ்வேளையில், காசநோய் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக், குறிப்பாகக் கூட்டமான இடங்களில் கடைப்பிடிக்கும்படி அந்நாட்டுச் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும், பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 14 வரை, மொத்தம் 596 புதிய காசநோய்ச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு கூறியது.
அண்மையக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, மலேசியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,161க்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
“கூட்டமான, மூடப்பட்ட, அதிகக் காற்றோட்டம் இல்லாத இடங்களில் காசநோய்ப் பரவுவதற்கான சாத்தியம் அதிகம். குறிப்பாக, காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அங்கிருந்தால், நோய்ப் பரவும் சாத்தியம் அதிகரிக்கும்,” என்று அமைச்சு கூறியது.
சமூக விழிப்புணர்வும், முனைப்பான நடவடிக்கைகளும் முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்கும், திறம்பட்ட முறையில் சிகிச்சை பெறுவதற்கும் காசநோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் முக்கியம் என்று அமைச்சு வலியுறுத்தியது.
“கூட்டாகச் செயல்பட்டால், அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான ரமலானை நாம் உறுதிசெய்யலாம்,” என்றது அமைச்சு.
சாபாவில் ஆக அதிகமாக 755 சம்பவங்கள் பதிவாயின. அதனைத் தொடர்ந்து, சிலாங்கூரில் 596 சம்பவங்களும், சரவாக்கில் 332 சம்பவங்களும் பதிவாயின.
ஜோகூரில் 280 சம்பவங்களும் கோலாலம்பூரிலும் புத்ரஜெயாவிலும் 244 சம்பவங்கள் பதிவாயின.

