பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டோரில் கிட்டத்தட்ட 85 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.
காசநோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் விகிதம் 15 விழுக்காடு மட்டுமே என்றார் அவர்.
“வெளிநாட்டினர் அதிகம் வந்ததால் காசநோய் அதிகம் பரவியதாக அண்மையில் பல்வேறு கருத்துகள் பரவின. ஆனால் புள்ளிவிவரங்கள் அதற்கு எதிராக உள்ளன. சுகாதார அமைச்சின் தரவுகள்படி காசநோயால் அவதியுறும் 85 விழுக்காட்டினர் மலேசியர்கள்,” என்றார் டாக்டர் சுல்கிஃப்லி.
அப்படியென்றால் உள்ளூர் அளவில் காசநோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்ற அவர், அதை மெத்தனமாகக் கருதக்கூடாது என்று எச்சரித்தார்.
காசநோயை வறுமையுடன் தொடர்புடைய நோய் என்று வருணித்த டாக்டர் சுல்கிஃப்லி, அளவுக்கு அதிகமானோர் ஒரே இடத்தில் வசிப்பது, சத்துணவு பற்றாக்குறை ஆகிய காரணங்களால் காசநோய் எளிதில் தொற்றுவதாகக் குறிப்பிட்டார்.
மலேசியாவின் பொதுச் சுகாதாரத் துறையில் காசநோய் புதிய தொற்று அல்ல என்றும் அது நீண்டகாலமாக மலேசியாவில் நிரந்தர நோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
“காசநோய் எளிதில் பரவக்கூடியது என்றபோதும் அதைத் தவிர்க்கவும் அதற்குச் சிகிச்சை அளிக்கவும் முடியும். முன்கூட்டியே கண்டறிந்துவிட்டால் காசநோயைக் குணப்படுத்தவும் முடியும்,” என்று நம்பிக்கை அளித்தார் டாக்டர் சுல்கிஃப்லி.
பொதுமக்கள் காசநோய் குறித்து விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்கும்படி அமைச்சர் சுல்கிஃப்லி அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டு வாரங்களுக்கும் மேல் இருமல், காய்ச்சல், குளிர்காய்ச்சல் ஆகியவை தென்பட்டால் உடன்படியாக மருத்துவரை நாடும்படி அவர் குறிப்பிட்டார்.
காசநோய் குறித்த தவறான எண்ணங்களையும் கைவிடும்படி டாக்டர் சுல்கிஃப்லி கேட்டுக்கொண்டார்.
இம்மாதம் 16ஆம் தேதி, மலேசியாவில் புதிதாக 503 பேரிடம் காசநோய் கண்டறியப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. நாட்டில் மொத்தம் 2,571 பேரிடம் காசநோய் தொற்று உள்ளது.

