பெட்டாலிங் ஜெயா: பிப்ரவரி 7ஆம் தேதி நிலவரப்படி மலேசியாவில் புதிதாகப் பத்து பேருக்கு காச நோய் ஏற்பட்டுள்ளது.
காச நோய் பரவலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள் போன்ற விழாக்காலங்கள் நெருங்குகையில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு பயணம் செய்பவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உடல்நலம் சரியில்லை என்றால் பயணம் மேற்கொள்ளாமல் இருப்பது நன்று. ஆனால், விழாக்காலம் என்பதால் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி அன்புக்குரியவர்களைக் காண விரும்புவர். எனவே, காச நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.
“நோய் பரவாமல் இருக்க முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது இது மிகவும் முக்கியம். காச நோய் மட்டுமல்ல, மற்ற வகை தொற்று நோய்களும் உள்ளன,” என்று மலாயா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல், பொதுச் சுகாதாரத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ரஃப்ட்ஸா அகமது ஸாக்கி தெரிவித்தார்.
“காச நோய் தொற்று நோய் வகையைச் சேரும். எனவே, ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்தாவிடில் மற்றவர்களுக்கு அந்நோய் பரவும். ஒருவருக்குக் காச நோய் ஏற்படும்போது அதன் அறிகுறிகள் தென்படுவதற்கே நீண்டகாலம் எடுக்கும்.
“எனவே, ஒருவருக்குக் காச நோய் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதும் கூடுதல் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு, வேறு யாராவதற்குக் காச நோய் ஏற்பட்டுள்ளதா என்று தெரியவரும். இந்நிலையில், சிலருக்குக் காச நோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. காச நோய் பரவல் சிறிது காலமாகவே இருந்து வருகிறது என்பதை இது காட்டுகிறது,” என்றார் டாக்டர் ரஃப்ட்ஸா.
தொடர்புடைய செய்திகள்
ஒன்றுகூடல்கள் நடைபெறும் இடங்கள் காற்றோட்டமாக இருப்பது அவசியம் என்றும் கதவுகளும் சன்னல்களும் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார்.
காச நோயிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டாக்டர் ரஃப்ட்ஸா தெரிவித்தார்.

