தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க உளவுத்துறை தலைவராக உறுதி செய்யப்பட்ட துளசி கப்பார்ட்

1 mins read
706748cb-9587-4639-bf88-14d74b9774d7
திருவாட்டி கப்பார்ட்டை நாட்டின் உளவுத்துறை தலைவராக நியமிப்பது குறித்து செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அவருக்கு ஆதரவாக 52 செனட்டர்களும் 48 செனட்டர்கள் எதிராகவும் வாக்களித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராகத் திருவாட்டி துளசி கப்பார்ட் என்பவரை புதன்கிழமை (பிப்ரவரி 12) அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தியது.

திருவாட்டி கப்பார்ட்டுக்குப் போதிய அனுபவம் இல்லை என்றும் இதற்கு முன்பு அவர் ரஷ்யாவுக்கும் சிரியாவுக்கும் ஆதரவு தெரிவித்தவர் என்றும் அவருக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன. சிரியாவின் முன்னாள் தலைவர் பஷார் அல் அசாத்தை திருவாட்டி கப்பார்ட் 2017ஆம் ஆண்டில் சந்தித்தார்.

அமெரிக்கத் தேசிய உளவுத்துறை இயக்குநராக உறுதி செய்யப்படுவதற்கு முன்பு அவரிடம் அமெரிக்க செனட் சபை பல கேள்விகளை எழுப்பியது. அதுமட்டுமல்லாது, உக்ரேன் போர் தொடர்பாக அவரது நிலைப்பாடு குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

அமெரிக்க அரசாங்கத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திருவாட்டி கப்பார்ட்டின் நிலைப்பாடு குறித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டது.

மேலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு தொடர்பான தகவல்களைக் கசியவிட்ட எட்வர்ட் ஸ்னோடனுக்கு அவர் ஆதரவு தெரிவித்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

திருவாட்டி கப்பார்ட்டை நாட்டின் உளவுத்துறை தலைவராக நியமிப்பது குறித்து செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அவருக்கு ஆதரவாக 52 செனட்டர்களும் எதிராக 48 செனட்டர்களும் வாக்களித்தனர்.

குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை அக்கட்சியைச் சேர்ந்த ஒரே ஒரு செனட்டர் மட்டுமே திருவாட்டி கப்பார்ட்டுக்கு எதிராக வாக்களித்தார்.

ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் திருவாட்டி கப்பார்ட் அமெரிக்க உளவுத்துறை தலைவராகக்கூடாது என்று அடித்துக் கூறினர்.

குறிப்புச் சொற்கள்