வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப், துளசி கப்பார்ட்டை அந்நாட்டு உளவுத்துறைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
43 வயதான திருவாட்டி கப்பார்ட், முன்னாள் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
இவர் 2022ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகினார்.
திருவாட்டி கப்பார்ட் 2024ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார்.
இவர், பைடன் அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்.
டிரம்ப்பின் துணை அதிபர் வேட்பாளராக திருவாட்டி கப்பார்ட் நியமிக்கப்படக்கூடும் என்று[Ϟ]கூட ஒருகட்டத்தில் பேசப்பட்டது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, அமெரிக்கத் தேசிய உளவுத்துறையின் தலைவராகத் திருவாட்டி கப்பார்ட் பொறுப்பேற்பார்.
அமெரிக்க உளவுத்துறையின் தற்போதைய தலைவராக திருவாட்டி அவ்ரில் ஹேன்ஸ் பதவி வகிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“துளசி, மிகவும் துணிச்சல்மிக்கவர். இந்த வீர உணர்வை அவர் தேசிய உளவுத்துறைக்கும் கொண்டு செல்வார் என்பதில் ஐயமில்லை. அவரது தலைமையின்கீழ் அமெரிக்காவின் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்படும். அத்துடன், உளவுத்துறை மிகவும் வலிமையுடன் இருந்து, அதன்மூலம் அமைதி நிலைநாட்டப்படும்,” என்று டிரம்ப் தமது அறிக்கையில் தெரிவித்தார்.
அமெரிக்கா, அமெரிக்கர்களின் சுதந்திரத்துக்கு திருவாட்டி கப்பார்ட் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் குரல் கொடுத்திருப்பதை டிரம்ப் சுட்டினார்.
திருவாட்டி கப்பார்ட், ஹவாயி தேசியப் படையில் மேஜர் பதவி வகித்தவர்.
2004ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு வரை அவர் ஈராக்கில் பணியமர்த்தப்பட்டார்.
தற்போது அவர் அமெரிக்காவின் போர்க்காலத் தயார்நிலைப் படையில் லெஃப்டினண்ட் கர்னலாகப் பதவி வகிக்கிறார்.