இஸ்தான்புல்: சிரியாவுக்கு மின்சாரம் வழங்கி அதன் மின்சக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்த துருக்கி இலக்கு கொண்டிருப்பதாக எரிசக்தித் துறை அமைச்சர் அல்பர்ஸ்லான் பய்ரக்தர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) தெரிவித்தார்.
எண்ணெய், இயற்கை எரிவாயு குறித்தும் சிரியாவின் புதிய தலைமைத்துவத்துடன் சேர்ந்து துருக்கி பணியாற்றலாம் என்றும் அவர் சொன்னார்.
சிரியாவில் 13 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, இந்த மாதம் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்த கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்த துருக்கி, சிரியாவுக்கு ஆட்சி அதிகாரத்தில் ஆலோசனை வழங்க முன்வந்துள்ள நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. சிரியாவை மீண்டும் கட்டியெழுப்ப துருக்கி சூளுரைத்துள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கசில் தூதரகங்களைத் திறந்துள்ள முதல் சில நாடுகளில் துருக்கியும் ஒன்று. துருக்கியின் வெளியுறவு அமைச்சரும் உளவுத்துறைத் தலைவரும் சிரியாவின் தலைவர் அகமது அல் ஷராவை சந்தித்தனர்.
இந்நிலையில், துருக்கியில் செய்தியாளர்களைச் சந்தித்த பய்ரக்தர், மின்விநியோகம், உள்கட்டமைப்பு, இதர விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்க, தாம் தலைமைத் தாங்கக்கூடிய பிரமுகர் குழு சனிக்கிழமை சிரியாவுக்குச் செல்ல திட்டமிட்டதாகக் கூறினார்.
“சிரியாவில் மின்சார வசதி இல்லாத பகுதிகளுக்கு நாங்கள் விரைவாக மின்சாரம் வழங்க வேண்டும்,” என்று அவர் கூறியதை ஹரியேட் செய்தித்தாள் மேற்கோள்காட்டியது.

