துருக்கி: விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டல் உண்மையல்ல

துருக்கி: விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டல் உண்மையல்ல

2 mins read
ff972d53-f1b1-4c96-9414-c1af6a772052
விமானத்தின் கழிவறையில் தாள் ஒன்று இருந்ததாகவும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அதில் எழுதப்பட்டிருந்ததாகவும் துருக்கிய அதிகாரிகள் கூறினர். - கோப்புப் படம்: விஸ்தாரா ஏர்லைன்ஸ்

இஸ்தான்புல்: இந்தியாவின் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அது துருக்கியின் கிழக்குப் பகுதியில் உள்ள எர்சுரம் நகரில் அவசரமாகத் தரையிறங்கியது.

இந்தச் சம்பவம் செப்டம்பர் 6ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

விமானம் துருக்கியில் தரையிறங்கியதும் அதில் இருந்த 234 பயணிகளும் 13 விமானச் சிப்பந்திகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தைத் துருக்கிய அதிகாரிகள் சோதனையிட்ட பிறகு, அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

சோதனைப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இருவரும் அடங்குவர்.

வெடிகுண்டைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் மோப்ப நாய் ஒன்றும் பயன்படுத்தப்பட்டது.

விமானத்தின் கழிவறையில் தாள் ஒன்று இருந்ததாகவும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அதில் எழுதப்பட்டிருந்ததாகவும் துருக்கிய அதிகாரிகள் கூறினர்.

விஸ்தாரா ஏர்லைன்ஸ் யுகே27 விமானம் மும்பையிலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நகருக்குச் சென்றுகொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தைத் துருக்கிய அதிகாரிகள் அலசியபோது, அந்த விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லவோ அல்லது அங்கு தரையிறங்கவோ மற்ற விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று எர்சுரம் ஆளுநர் முஸ்தஃபா சிஃப்சி தெரிவித்தார்.

விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விமான நிலையம் வழக்கநிலைக்குத் திரும்பியதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட விமானம் மட்டுமின்றி அதில் இருந்த பயணிகள், விமானச் சிப்பந்திகள் ஆகியோரையும் துருக்கிய அதிகாரிகள் சோதனையிட்டனர்.

தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

“விமானச் சிப்பந்திகள் தங்கள் பணி நேரத்தைக் கடந்துவிட்டதால், நாங்கள் ஒரு மாற்று விமானத்தை, புதிய பணியாளர்களுடன், துருக்கியின் எர்சுரம் விமான நிலையத்திற்கு அனுப்புகிறோம். அது 12.25 மணிக்கு (உள்ளூர் நேரம்) அங்கு வந்து சேர்ந்து பின்னர் அனைத்து பயணிகளுடன் 14.30 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஃபிராங்ஃபர்ட்டுக்கு புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்