அங்காரா: விமானம் மூலம் துருக்கி நாட்டிற்குப் பயணம் செய்தால் இருக்கைவார் அடையாள விளக்கு அணையும்வரை அதனை அணிந்திருப்பது நல்லது. இல்லையெனில், அபராதம் செலுத்த நேரிடலாம்.
விமானம் முழுவதுமாக நிற்குமுன் இருக்கைவாரைக் கழற்றிவிட்டு பயணிகள் தங்கள் இருக்கையைவிட்டு எழுந்திருப்பதைத் தடுக்க துருக்கி பொது விமானப் போக்குவரத்து ஆணையம் புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அவ்விதியை மீறும் பயணிகளுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படவில்லை. ஆயினும், 70 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படலாம் என்று துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் முழுவதுமாக நிற்குமுன் பயணிகள் இருக்கையைவிட்டு எழுந்திருக்கும் போக்கு அதிகரித்துள்ளதை அடுத்து, இந்த மே மாதத்திலிருந்து புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணத்தின்போது விமானத்திற்குள் புதிய விதி குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமீறும் பயணிமீது இடையூறு ஏற்படுத்தும் பயணியாகப் பொது விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககத்தில் புகாரளிக்கப்பட்டு, பின்னர் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சுருக்கமாகச் சொன்னால், இருக்கையிலேயே அமர்ந்து பாதுகாப்பாக இருங்கள், அபராதத்தைத் தவிர்த்திடுங்கள்!