தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துருக்கியில் மேயருக்குச் சிறை; ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

1 mins read
0501db5c-30a9-4061-b5ac-30ead0f494de
இஸ்தான்புல் நகரில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்தான்புல்: துருக்கியில் மேயர் ஒருவர் சிறைக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

துருக்கியில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

துருக்கிய அதிபர் தயிப் எர்துவானின் முக்கிய அரசியல் எதிரியாகக் கருதப்படும் மேயர் எக்ரம் இமாமொக்லு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை (மார்ச் 29) ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் திரண்டனர்.

இமாமொக்லு சென்ற வாரம் தடுத்துவைக்கப்பட்டார். அரசியல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கவிருக்கும் அவர் பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அதையொட்டி எதிர்க்கட்சியினர் விடுத்த அழைப்புக்கு ஏற்றவாறு நூறாயிரக்கணக்கானோர் துருக்கி முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியாகவே நடந்தன. எனினும், கிட்டத்தட்ட 2,000 பேர் தடுத்துவைக்கப்பட்டனர்.

இமாமொக்லுவுக்கு எதிரான வழக்கு, தேர்தலில் திரு எர்துவானுக்குப் போட்டியாக இருக்கக்கூடியவரை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்டும் நடவடிக்கை என்று ஆகப் பெரிய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி (CHP), இதர எதிர்க்கட்சிகள், மேற்கத்திய நாடுகள் ஆகிய தரப்புகள் சாடுகின்றன.

எனினும், சட்ட நடைமுறையில் தாங்கள் தலையிடவில்லை என்று துருக்கிய அரசாங்கம் கூறிவருகிறது. நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

“நீதி அமைதி காத்தால் மக்கள் குரல் கொடுப்பர்,” என்று இஸ்தான்புல்லில் திரண்ட பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்கார்கள் ஏந்திய பதாகைகளில் ஒன்றில் எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்