இஸ்தான்புல்: துருக்கியில் இனி தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளின் விருப்பத்தின்பேரில் பிரசவ அறுவை சிகிச்சை (C-section) மேற்கொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டுச் சுகாதார அமைச்சின் புதிய விதிமுறைப்படி மருத்துவக் காரணங்களுக்கு மட்டும்தான் கர்ப்பிணிகள் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
அதற்கான அதிகாரபூர்வ சட்ட விதிமுறைகளையும் துருக்கிய அரசாங்கம் வார இறுதியில் அறிவித்தது.
இந்த விதிமுறைக்கு எதிராகத் துருக்கியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சியினரும் தன்னார்வ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெண்கள் இயற்கையான முறையில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று துருக்கிய அதிபர் எர்துவான் வலியுறுத்தி வருகிறார்.
2021ஆம் ஆண்டின் தரப்படி ‘ஓஇசிடி’ என்ற பொருளியல் கூட்டமைப்பில் உள்ள 38 நாடுகளில் ஆக அதிக அளவில் பிரசவ அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நாடாகத் துருக்கி உள்ளது.
அந்த ஆண்டு 1,000 குழந்தைகளில் 584 குழந்தைகள் அறுவை சிகிச்சைமூலம் பிறந்தன.