மெக்கா: சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகியவை கூட்டுத் தற்காப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றின்மீது தாக்குதல் நடத்துவது மூன்று நாடுகளின்மீதும் தாக்குதல் நடத்துவதைப் போல கருதப்படும் என்று ஒப்பந்தம் கூறுகிறது.
சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், துருக்கிய அதிபர் ரிசப் தயிப் எருதுவான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் ஆகியோர் சந்தித்துக்கொண்டபோது ஒப்பந்தம் குறித்து அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை, செங்கடல் ஆகியவற்றின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மூன்று நாடுகளும் முனைந்தன.
சவூதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஏற்கெனவே கடந்த ஆண்டு கூட்டுத் தற்காப்பு ஒப்பந்தத்தை அறிவித்தன.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈரானும் அதன் நட்பு நாடுகளும் சவூதி அரேபியாமீதும் பிற வளைகுடா நாடுகள்மீதும் தாக்குதல்களைத் தொடுத்து கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தின. ஈரானின் ஆதரவுபெற்ற ஹூதி கிளர்ச்சிக் குழு சவூதியால் வழிநடத்தப்படும் கூட்டணியின் ஆதரவுபெற்ற அரசாங்க வீரர்களுக்கு எதிராக ஏமனில் சண்டையிட்டுவருகின்றன.
துருக்கி, நேட்டோ கூட்டணியின் உறுப்பு நாடுகளில் ஒன்று. அமெரிக்காவின் மற்றொரு நட்பு நாடான சவூதி அரேபியா, உலகின் ஆகப் பெரிய அளவில் எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. பாகிஸ்தான் அணுவாயுத ஆற்றல் கொண்ட ஒரே முஸ்லிம் நாடு. இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தினால் மூன்று நாடுகளின்மீதும் தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் அதிபர் ஷெபாஸ் ஷரிஃப் வலியுறுத்தினார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல்மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கு வட்டாரத்தில் போர் மூண்டு, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் பதற்றநிலை நீடித்துவருகிறது.
மத்திய கிழக்கில் உள்ள பெரும்பாலான நாடுகளில் எல்லை தாண்டிய தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள், ஆளில்லா வானூர்தி வழி தாக்குதல்கள் ஆகியவை இடம்பெற்றுவருகின்றன.


