துருக்கி நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து தான் மீட்டெடுத்த பூனை ஒன்றைத் தத்தெடுத்துள்ளார் துருக்கிய தீயணைப்பு வீரர் ஒருவர். இந்தச் செயலால் உலகெங்கும் உள்ள விலங்குப் பிரியர்களின் உள்ளங்களை அவர் கவர்ந்துள்ளார்.
இடிபாடுகளில் 129 மணிநேரத்திற்கு மேலாக சிக்கிக்கொண்ட பூனையை அலி காக்காஸ் எனும் தீயணைப்பு வீரர் மீட்டெடுத்தார். அதனைத் தொடர்ந்து அந்த கறுப்பு-வெள்ளை நிற பூனை அவரைப் பின்தொடர்ந்து சென்றது.
33 வயதான காக்காஸ் இரவு முழுவதும் இடிபாடுகளில் உயிருடன் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதும், அந்தப் பூனை அவரைப் பின்தொடர்ந்தது.
பூனையின் உரிமையாளரை காக்காஸ் தேட முயன்றார். ஆனால் எந்த பலனும் இல்லை. பூனையின் உரிமையாளர் மாண்டிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
இறுதியில் காக்காஸ் அந்தப் பூனையைத் தத்தெடுத்துகொண்டார். அவரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பூனை தன்னைவிட்டு ஒரு நொடிகூட விலகுவதில்லை என்றும் அது மீட்கப்பட்டதில் இருந்து சோகமாக இருக்கிறது என்றும் காக்காஸ் கூறினார்.

