நிலநடுக்கத்தால் பெரும் சீரழிவைச் சந்தித்துள்ள துருக்கியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சேவை அளித்து வரும் இந்திய ராணுவத்தினரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய மருத்துவக்குழுவைச் சேர்ந்த மேஜர் வீணா திவாரியின் கன்னத்தில் முத்தமிட்டு துருக்கி பெண்மணி ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இந்திய ராணுவம் வெளியிட்டது.
ராணுவ மருத்துவர் கர்னல் யதுவீர் சிங் தலைமையில் 14 மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட 86 பேர் கொண்ட மருத்துவக்குழு துருக்கி சென்றுள்ளது. அங்கு காயமடைந்தவர்களுக்கு இக்குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர்.
மேஜர் வீணா திவாரியும் இரவு பகல் பாராமல் மருத்துவச் சேவையாற்றுகிறார்.
இதைக் கண்டு நெகிழ்ந்துபோன துருக்கி பெண்மணி மேஜர் வீணாவுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட அவர், கண்ணீர் சிந்தியபடியே இந்திய மேஜரைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.
இந்நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த ஆறு வயது நஸ்ரின் என்ற சிறுமி இந்திய வீரர்களால் மீட்கப்பட்டாள். மேஜர் வீணா தலைமையிலான குழு தீவிர சிகிச்சை அளித்ததை அடுத்து, சிறுமி உயிர் பிழைத்தாள்.
சிறுமியுடன் மேஜர் வீணா திவாரி இருக்கும் புகைப்படத்தையும் இந்திய ராணுவம் வெளியிட்டிருக்கிறது.
வீணாவின் தந்தையும் பாட்டனாரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் ஆவர். மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த வீணாவும் மருத்துவம் படித்து ராணுவத்தில் இணைந்து சேவையாற்றி வருகிறார்.

