வாஷிங்டன்: அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வரி, தடைகளை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடியாக ரத்து செய்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் அவர் கையெழுத்திட்டுச் சட்டமாக்கிய ஒரு மசோதாவின்கீழ் இன்னும் சில நாள்களில் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளும் வரிகளும் அமலாகவிருந்தன.
ஆனால் ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட பல தடைகள், கட்டுப்பாடுகள், இறக்குமதி வரி ஆகிய அனைத்தையும் ரத்து செய்வதாகத் திரு டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) அறிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் ரஷ்யாவுடன் அதிபர் டிரம்ப் இணக்கமான போக்கைக் கையாண்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் ரஷ்யா, உக்ரேனிய விவகாரத்தில் உக்ரேனுக்குப் புதிய தலைவர் தேவை என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கிக்கு எதிராக டிரம்ப் கருத்துரைத்துள்ளார்.
இந்த நிலையில் டிரம்ப்பின் தடை, வரி விலக்கு உத்தரவு வெளியாகியுள்ளது.
காலஞ்சென்ற செனட்டர் லின்ட்சே கிரஹம் ஆதரவில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி இந்தச் சட்டம், அமலுக்கு வந்த 30 நாள்களுக்குப் பிறகு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் 30 நாள்களுக்குள் 100 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும்.
செப்டம்பர் நடுப்பகுதியில் டிரம்ப் லின்ட்சே ஓ. கிரஹம் ரஷ்யா, ஈரான் மீதான தடைச் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
“இத்தகைய விலக்கு அளிக்கப்படுவது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு உகந்தது என்பதற்கான சான்றிதழை நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்,” என்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) வெள்ளை மாளிகை வெளியிட்ட உத்தரவில் டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்ய எண்ணெய்யை அதிகளவு வாங்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா போன்ற நாடுகள், இந்த ரஷ்யத் தடை மசோதா குறித்து மிகுந்த கவலை தெரிவித்திருந்தன.
