பெட்டாலிங் ஜெயா: சாலையில் மோட்டார்சைக்கிளில் சாகசம் செய்தபோது விபத்துக்குள்ளாகி 13 வயதுச் சிறார் இருவர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் மலேசியாவின் சுங்கை பெலோங், அமான் புத்திரியிலுள்ள ஜாலான் எல்மினா வணிகப்பூங்கா பகுதியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) இரவு நிகழ்ந்தது.
இரவு 11.20 மணியளவில், எதிரெதிர்த் திசையிலிருந்து சாகசம் செய்தபடி அவ்விரு சிறாரும் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதாகச் சுங்கை பூலோ காவல்துறைத் தலைவர் ஹஃபிஸ் நோர் தெரிவித்தார்.
அவ்விரு சிறாரும் நிகழ்விடத்திலேயே மாண்டுபோனதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுங்கை பூலோவில் இவ்வாண்டு சட்டவிரோதமாக மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாகவும் அதனால் 11 பேர் இறந்துவிட்டதாகவும் திரு ஹஃபிஸ் கூறினார்.
ஒப்புநோக்க, கடந்த ஆண்டு இவ்வகையில் மூன்று உயிரிழப்புகளே பதிவாகின.
தங்கள் பிள்ளைகள் எங்குள்ளனர் என்பது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய திரு ஹஃபிஸ், சட்டவிரோதமாகப் பந்தயங்களில் ஈடுபடுவது அவர்களின் உயிருக்கு மட்டுமின்றி, சாலைகளைப் பயன்படுத்தும் பிறரது உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும் என எச்சரித்தார்.
அத்துடன், வயது குறைந்த மோட்டார்சைக்கிளோட்டிகள் மீதும் பெற்றோர் உள்ளிட்ட அவர்களின் சட்டபூர்வ பாதுகாவலர்கள் மீதும் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு 2,000 ரிங்கிட்வரை அபராதம் அல்லது ஆறு மாதம்வரை சிறை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
“கவனக்குறைவின்றிச் செயல்பட்டு, தங்கள் குழந்தைகளை ஆபத்தில் தள்ளிவிட்டதாகப் பெற்றோர்கள்மீது குழந்தைச் சட்டத்தின்கீழும் குற்றம் சுமத்தப்படலாம்,. குற்றமிழைத்தது உறுதியானால், அவர்களுக்கு 50,000 ரிங்கிட்வரை அபராதம் அல்லது 20 ஆண்டுவரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்,” என்று திரு ஹஃபிஸ் எச்சரித்துள்ளார்.