சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலைய ஓடுபாதையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) இரு விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் அபாயத்திலிருந்து நூலிழையில் தப்பின.
இச்சம்பவம் குறித்து தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஆஸ்திரேலியப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள கோல்ட் கோஸ்ட் நகருக்குப் புறப்படுவதற்காக ஜெட்ஸ்டார் ஏ320 விமானம் ஒன்று ஓடுபாதையில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, குறுக்கே செல்லும் ஓடுபாதையில் விமான இழுவை வாகனத்தால் இழுத்துச் செல்லப்பட்ட கத்தார் ஏர்வேசின் போயிங் 777 விமானம் மிக அருகில் வந்ததை ஜெட்ஸ்டார் விமானிகள் கண்டதாகப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு குறிப்பிட்டது. அதனைத் தொடர்ந்து, இரு விமானங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால், ஜெட்ஸ்டார் விமானத்திலிருந்த விமான ஊழியர் ஒருவர் காயமடைந்தார். கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் முன்புறச் சக்கரத்திற்கும் விமான இழுவை வாகனத்துக்கும் இடையிலான இணைப்புச் சாதனமும் சேதமடைந்தது. ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாசின் மலிவுக் கட்டணப் பிரிவான ஜெட்ஸ்டார், இச்சம்பவம் குறித்து தனியாக விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவின் வழிகாட்டுதல்களை விமானம் பின்பற்றியதாகவும் மற்றொரு விமானம் மிக அருகில் வந்ததைத் தொடர்ந்து விமானிகள் உடனடியாக விமானத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் ஜெட்ஸ்டார் பேச்சாளர் தெரிவித்தார். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் சுழற்சிமுறைப் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, புறப்பாட்டு இடைவெளி நடைமுறையை அரசாங்க அமைப்பான ஏர்சர்விசஸ் ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்தியது. இதன் காரணமாக, சிட்னி விமான நிலையத்தில் விமானச் சேவையில் தாமதம் ஏற்பட்டதற்கு அடுத்த நாள் இச்சம்பவம் நேர்ந்தது.


