ஆஸ்திரேலியக் காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை

1 mins read
3eb13b6e-6fd8-4ccf-b540-f183c2f22b8b
துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த பகுதியில் விக்டோரியா மாநிலக் காவல்துறையினர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்; இன்னொருவர் காயமடைந்தார்.

அங்குள்ள ஊரகப் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் உயிருடற்சேதம் தொடர்பான தகவல்களைக் காவல்துறை வெளியிடவில்லை.

ஆயினும், ஏபிசி உள்ளிட்ட ஊடகங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக் குறித்த செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தம் குடும்பத்துடன் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வடகிழக்கு விக்டோரியாவிலுள்ள மலையடிவார நகரான போர்பங்காவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

“துப்பாக்கிச்சூடு நடத்தியவரைத் தேடி வருகிறோம். உரிய நேரத்தில் சம்பவம் குறித்த தகவல்களை வெளியிடுவோம்.

“துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று விக்டோரியா காவல்துறை ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் ஆடவர் ஒருவரைக் கைதுசெய்ய காவல்துறையினர் சென்றபோது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நிகழ்ந்ததாக ‘தி ஏஜ்’ நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த ஆயுதமேந்திய அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ‘இறையாண்மைக் குடிமகன்’ (sovereign citizen) என்று காவல்துறை நம்புவதாக ‘ஏபிசி’ செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் என்பது சட்டவிரோதமானது என்று இறையாண்மைக் குடிமக்கள் நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்