மலேசியப் பிரதமருக்குப் பெருநாள் பணமாக $2.30 வழங்கிய சிறார்கள்

மலேசியப் பிரதமருக்குப் பெருநாள் பணமாக $2.30 வழங்கிய சிறார்கள்

2 mins read
1af8f5c6-43ca-4ebb-96e6-3432d773ffa8
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அனுப்பிய பரிசுகளுடன் பத்து வயது ஆயிஷா கதீஜா, எட்டு வயது உவைஸ் அல் கர்னி. - படம்: அன்வார் இப்ராகிம் ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இரண்டு உடன்பிறப்புகள், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்ததில் மிகுந்த உற்சாகம் அடைந்து, மலேசியத் தலைவருக்குத் தங்களுக்குக் கிடைத்த நோன்புப் பெருநாள் அன்பளிப்புப் பணத்திலிருந்து ஏழு ரிங்கிட்டை ($2.30) வழங்கினர்.

அவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில், அவர்களின் அந்த அன்பான செயலுக்குப் பிரதிபலனாக, மறுநாள் திரு அன்வாரிடமிருந்து நோன்புப் பெருநாள் அன்பளிப்புப் பொட்டலங்கள், ஐபேட்டுகள், பள்ளிப் பொருள்கள், ஒரு குர்ஆன் ஆகிய பரிசுகள் திரெங்கானுவில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றுசேர்ந்தன.

“உவைஸ் மற்றும் ஆயிஷா நேற்று எனக்கு நோன்புப் பெருநாள் பணம் கொடுத்ததில் காட்டிய நேர்மை உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டுகிறது,” என்று திரு அன்வார் ஏப்ரல் 14ஆம் தேதி ஒரு ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஃபேஸ்புக் பதிவில் திரு அன்வார், அந்தப் பரிசுகள் அவர்களின் விலைமதிப்பற்ற நேர்மைக்கான பாராட்டுக்குரிய அடையாளம் என்றும், குழந்தைகள் அறிவைத் தேடவும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் ஊக்குவிக்கும் நோக்கில் அந்தப் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

ஏப்ரல் 13ஆம் தேதி திரு அன்வாருடனான சந்திப்பு தற்செயலாக நிகழ்ந்தது. பிரதமரின் கார் தங்களைக் கடந்து சென்றதைச் சிறார்களும் அவர்களின் தாயும் உணர்ந்த பின்னரே அது நிகழ்ந்தது.

திரு அன்வார் அன்று திரெங்கானுவிற்கு ஒரு நாள் பணி நிமித்த பயணத்தில் இருந்தார். மேலும் அன்றிரவு கோலாலம்பூருக்குத் திரும்ப விமானத்தில் செல்லவிருந்தார்.

“எங்களைக் கடந்து சென்ற வாகனத்தில் பிரதமர் இருக்கிறார் என்று அவர்களிடம் சொன்னபோது, ​​குழந்தைகள் மிகவும் உற்சாகமடைந்தனர். அவர்கள் பிரதமரைச் சந்திக்க விரும்பினார்கள்,” என்று குழந்தைகளின் தாயான 49 வயது திருமதி லிசா ஃபட்சிலா அப்துல் ஹமீத் கூறியதாக, உள்ளூர் ஊடகமான கோஸ்மோ கூறியது.

திருவாட்டி லிசாவும் அவரது பிள்ளைகளும் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தனர். ஆனால், மலேசியத் தலைவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

திரு அன்வாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட அந்த உரையாடலின் காணொளியில், திரு அன்வார் ஒரு நுழைவாயிலை நோக்கி நடந்துசெல்வது தெரிகிறது. அதோடு, சிறார்கள் அவருக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துகள் கூறும் சத்தமும் கேட்கிறது.

சிறார்கள், நுழைவாயிலில் உள்ள துளைகள் வழியாகத் தங்கள் கைகளை நீட்டி, அன்பளிப்புப் பொட்டலங்களை அவரிடம் கொடுப்பதைக் காண முடிகிறது. திரு அன்வார் அவற்றை வாங்கிக்கொண்டு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதையும் பார்க்க முடிந்தது.

குறிப்புச் சொற்கள்