கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் காய்கறிக் கடை ஒன்றில் இதுவரை கண்டிராத ஓர் அதிசயம் மக்களைக் கவர்ந்துவருகிறது. இரண்டு வெவ்வேறு நிறங்களில் உள்ள ஓர் ஆப்பிள், பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு பாதி சிவப்பும் மறுபாதி மஞ்சளுமாக வந்த ஆப்பிளால் மக்கள் பலர் திக்குமுக்காடினர். இப்படி இரண்டு நிறங்கள் கொண்ட ஆப்பிள் ஷிமேரா ஆப்பிள் என்று அழைக்கப்படுகின்றது.
கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள சன்ஷைன் கார்னர் கடையில் வந்திறங்கிய பிரேபர்ன் ஆப்பிள்களில் அந்த ஷிமேரா ஆப்பிள் கண்டெடுக்கப்பட்டது.
மரபணு உருமாற்றத்தால் ஆப்பிளில் இரண்டு நிறங்கள் தோன்றின. ஒரு மில்லியன் ஆப்பிள்களில் ஓர் ஆப்பிளில் மட்டுமே அத்தகைய மரபணு உருமாற்றம் நிகழும் எனக் கூறப்படுகிறது.
கடைக்கு வந்த ஷிமேரா ஆப்பிள், உள்ளூர் பிரபலமாகிவிட்டதாகக் கூறினார் சன்ஷைன் கார்னர் கடை உரிமையாளர் ஹீதர்.
“ஆப்பிளைப் பார்த்தவர்கள் அதுபற்றிப் பிறரிடம் சொல்லும்போது யாரும் அவர்களை நம்புவதில்லை. அவ்வாறு நம்பாதவர்கள் கடைக்கே வந்து ஆப்பிளைப் பார்த்துச் செல்கின்றனர்,” என்றார் அவர்.
ஷிமேரா ஆப்பிளால் உற்சாகமடைந்த பலரும் அதனைப் புகைப்படம் எடுத்துச் செல்வதாகக் கூறிய ஹீதரும் இத்தகைய ஆப்பிளைக் கண்டது இதுவே முதன்முறை.
குளிர்பதனப் பெட்டியில் வைத்து ஆப்பிளின் ஆயுட்காலத்தை இப்போதைக்கு நீட்டிப்பதாகக் கூறிய ஹீதர், அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை என்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஆப்பிளைத் தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருப்பதா அல்லது அதை வெட்டி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதா என இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

