வாஷிங்டன்: அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் புதன்கிழமை (செப்டம்பர் 2) ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் மரணமடைந்தனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் மூவர் உட்பட பலர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரும் மாண்டான். அவன் எப்படி உயிரிழந்தான் என்பது தெரியவில்லை என்று செய்தியாளர் கூட்டத்தில் காவல்துறைப் பேச்சாளர் காரெட் பார்ட்டென் கூறினார்.
சம்பவ இடத்திலேயே ஒருவர் மாண்டதாகத் திரு பார்ட்டென் சொன்னார். நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பின்னர் மரணமடைந்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டோரில் மூவர் காவல்துறை அதிகாரிகள். அவர்களில் இருவருக்குத் துப்பாக்கிச் சூட்டால் காயம் ஏற்பட்டது. இருவரின் உடல்நிலையும் சீராய் இருப்பதாக மருத்துவமனைப் பேச்சாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மூன்றாவது அதிகாரிக்கு என்ன காயம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. துப்பாக்கிக்காரனின் நோக்கம் என்ன என்பது பற்றிச் செய்தியாளர் கூட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை.
ஆளுநர் டிம் வால்ஸ், மினசோட்டாவிற்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் காஷ் படேல், தமது அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நகர அதிகாரிகள் புதன்கிழமைப் பின்னேரத்தில் செய்தியாளர் கூட்டத்தை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


