பென்சில்வேனியாவில் தட்டம்மை நோய்க்கு இருவர் பலி

பென்சில்வேனியாவில் தட்டம்மை நோய்க்கு இருவர் பலி

2 mins read
90424280-6e42-45e6-a14a-f89cdbb8136c
தடுப்பூசி போடும் விகிதம் கணிசமாகக் குறைந்து வருவதைத் தொடர்ந்து, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வகையில் தீவிரமாகப் பரவி வரும் தட்டம்மை நோயால், 2026ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வாஷிங்டன்: அமெரிக்க மாநிலமான பென்சில்வேனியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கச் சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி போடும் விகிதம் கணிசமாகக் குறைந்து வருவதைத் தொடர்ந்து, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வகையில் தீவிரமாகப் பரவி வரும் இந்த தொற்றுநோயால், 2026ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பதிவான முதல் மரணங்கள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த இருவரும் லான்காஸ்டர் கவுண்டியைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் எனப் பென்சில்வேனியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், தனிநபர் விவரங்கள் காக்கும் பொருட்டு அவர்களின் கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் பிறப்பித்த நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

அந்த உத்தரவில், தட்டம்மைக்கு 97 விழுக்காடு வரை சிறந்த பாதுகாப்பளிக்கும் ‘எம்எம்ஆர்’ தடுப்பூசியைக் கடுமையாக விமர்சித்திருந்த அவர், பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் இந்த தடுப்பூசியைத் தனித்தனி மூன்று தடுப்பூசிகளாகப் பிரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

பல ஆண்டுகளாகப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் அறிவியல் ஆதாரங்களுக்கு மாறாக, ‘எம்எம்ஆர்’ தடுப்பூசிகள் ஒன்றாகச் சேர்க்கப்படும்போது அது உயிருக்கே ஆபத்தாக முடியும் சாத்தியம் உள்ளது என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே தட்டம்மை காரணமாக நேர்ந்த உயிரிழப்புகள் குறித்து அமெரிக்கச் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையும் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையமும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளன.

மேலும், இது தொடர்பாக மாநில மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவை தெரிவித்தன.

“தட்டம்மை நோய்க்கு எதிராக ‘எம்எம்ஆர்’ தடுப்பூசியே மிகவும் பயனுள்ள பாதுகாப்பை வழங்குவதோடு, அது பரவாமலும் தடுக்கிறது,” என்று சுகாதாரத் துறையின் செய்தித்தொடர்பாளர் எமிலி ஹிலியார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், ‘எம்எம்ஆர்’ உள்ளிட்ட தடுப்பூசிகள் சிறுவர்களிடையே மதியிறுக்கம் (ஆட்டிசம்) குறைபாட்டை அதிகரிக்கும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக அமெரிக்கச் சுகாதார அமைச்சர் ராபர்ட் எஃப். கென்னடி பல ஆண்டுகளாக வாதிட்டு வருகிறார்.

ஆனால், ஆயிரக்கணக்கான சிறுவர்களை உட்படுத்தி பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகளின் மூலம் இக்கருத்து முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பென்சில்வேனியாவில் பரவி வரும் தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் உதவி வழங்குவதாக கென்னடி விடுத்த கோரிக்கையைத் தாம் நிராகரித்துவிட்டதாகப் பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷபிரோ தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகளும் பேச்சுகளும் சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தி வருகின்றன என்பதை நான் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காதட்டம்மைமரணம்