மேடிசன், விஸ்கான்சின்: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் திங்கட்கிழமை (டிசம்பர் 16) 15 வயதுச் சிறுமி ஒருத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சக மாணவரும் ஆசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டதோடு அறுவர் காயமுற்றனர்.
பின்னர் அந்தக் கைத்துப்பாக்கியால் அச்சிறுமி தன்னையே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
அமெரிக்காவை அதிரவைத்த இந்த ஆக அண்மைய துப்பாக்கிச்சூடு, விஸ்கான்சின் தலைநகர் மேடிசனில் உள்ள ‘அபண்டன்ட் லைஃப்’ கிறிஸ்துவப் பள்ளியில் அரங்கேறியது. பாலர்பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரை ஏறக்குறைய 400 மாணவர்கள் அப்பள்ளியில் பயில்கின்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் இரு மாணவர்களின் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டதாக மேடிசன் காவல்துறைத் தலைவர் ஷோன் பார்ன்ஸ் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சிறுமி ஒருத்தி பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்துவது அரிதே. அமெரிக்காவில் நடந்த எல்லா துப்பாக்கிச்சூடுகளிலும் வெறும் 3 விழுக்காடு மட்டுமே பெண்களால் அரங்கேறியதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
இந்நிலையில், மேடிசன் பள்ளித் துப்பாக்கிச்சூட்டிற்கான நோக்கம் தெரியவில்லை. அச்சிறுமியின் குடும்பத்தார் விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.
K-12 பள்ளித் துப்பாக்கிச்சூட்டுத் தரவுத்தள இணையப்பக்கத்தின்படி, 2024ல் அமெரிக்காவில் 322 பள்ளித் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 1966க்குப் பிறகு இதுவே இரண்டாவது ஆக அதிக எண்ணிக்கை. 2023ல்தான் ஆக அதிகமாக 349 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நடந்தன.