தைப்பே: தைவானை மிகப் பெரிய சூறாவளி உலுக்கியதைத் தொடர்ந்து, ஊழியர்கள் விழுந்த மரங்களையும், கடை உரிமையாளர்கள் இடிபாடுகளையும் அகற்றி வருகின்றனர்.
‘கொங் ரெ’ எனும் அந்தச் சூறாவளியில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர்.
அச்சூறாவளி, அக்டோபர் 31ஆம் தேதி கிழக்குத் தைவானை மணிக்கு 184 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியது.
மரங்கள் சரிந்ததோடு, வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
தலைநகர் தைப்பேயில் அக்டோபர் 31ஆம் தேதி, மின்சாரக் கம்பி விழுந்ததில் 48 வயது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாண்டோர் எண்ணிக்கை 2ஆக பதிவானது.
சூறாவளியால் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தேசிய தீயணைப்புத் துறை தெரிவித்தது.
இந்நிலையில், மத்திய தைவானில் உள்ள மலைப்பகுதிகளுக்கு வேட்டையாடச் சென்ற நால்வருக்கான தேடல் பணிகள் தொடர்கின்றன. சூறாவளி தாக்கியதிலிருந்து அவர்களைக் காணவில்லை.
நவம்பர் 1ஆம் தேதி ‘கொங் ரெ’ சூறாவளி தைவான் நீரிணையைக் கடந்து சீனாவை நோக்கிச் செல்வதாக மத்திய வானிலை நிர்வாகம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, தைவான் வழக்கநிலைக்குத் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது. அலுவலகங்கள், உணவகங்கள், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
“நேற்று சூறாவளி மிக வலுவாக இருந்தது. அருகில் உள்ள பள்ளியில் இருந்த மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன,” என்று தைப்பேயில் உள்ள தமது உணவகத்திலிருந்து திருவாட்டி பன் லி சு ஏஎஃப்பி செய்தியாளர்களிடம் கூறினார்.
கிழக்குக் கடலோரப் பகுதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சில இடங்களில், சூறாவளி காரணமாக ஒரு மீட்டருக்கும் அதிகமான நீர் பதிவானதாக மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்தது.

