சோல்: தென்கொரியாவில் மார்ச் 22ஆம் தேதி, காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தென்பகுதியில் உள்ள 15 கிராமங்களில் வசிக்கும் 200க்கு மேற்பட்டோருக்கு, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சான்சியோங் பகுதியில் மார்ச் 21ஆம் தேதி பிற்பகல் காட்டுத் தீ மூண்டது. அதையடுத்து தீயணைப்பு வீரர்கள் 304 பேருடன் 20 ஹெலிகாப்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தென்கொரிய உள்துறை அமைச்சு தெரிவித்தது.
மார்ச் 22ஆம் தேதி, தீயணைப்பு வீரர்கள் இருவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறிய தீயணைப்புத் துறை, தனிநபர் இருவரைக் காணவில்லை என்றும் கூறியது. காணாமற்போன இருவரும் தீயணைப்பு வீரர்களா என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை.
நாட்டின் மத்திய, தென்பகுதிகள் சிலவற்றில் காட்டுத் தீயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கொரிய வனத்துறை தெரிவித்தது.
அத்தகைய 12 இடங்களுக்குக் கடுமையான எச்சரிக்கையை அது விடுத்துள்ளது.
தீயை விரைந்து அணைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தென்கொரியாவின் தற்காலிக அதிபர் சோய் சங்-மொக் உத்தரவிட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்தது.

