வெள்ளை மாளிகை அருகே சுடப்பட்ட இரு வீரர்கள்: ஆப்கானிஸ்தான் ஆடவர் கைது

2 mins read
d12fa8c1-3096-4aea-a332-0a0cecc1209a
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தில் தடயங்களைச் சேகரித்த அதிகாரிகள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை அருகே தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.

புதன்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற அந்தச் சம்பவத்தின் தொடர்பில் ஒரு சந்தேக நபர் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் நகரில் காவல்துறை கூறியது.

அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 29 வயது ரஹ்மானுல்லா லக்கன்வால் என்று அவரை விசாரணை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு 2024 டிசம்பரில் லக்கன்வால் செய்த விண்ணப்பம் இவ்வாண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு அடைக்கலம் தருவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் குற்றப் பின்னணி எதுவும் இல்லாதவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் பயங்கரவாதச் செயலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுடப்பட்ட இரு வீரர்களும் கடுமையாகக் காயமுற்றதாகவும் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வேறு சில அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், சம்பவம் நிகழ்ந்த பகுதி முழுமையான பாதுகாப்புக்குள் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து அதிபரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் திருவாட்டி கரோலின் லீவிட் கூறினார்.

சம்பவம் நிகழ்ந்தபோது அதிபர் டோனல்ட் டிரம்ப் விடுமுறையைக் கழிப்பதற்காக ஃபுளோரிடா மாநிலத்தின் பாம் கடற்கரை உல்லாச மாளிகையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

துணை அதிபர் ஜே.டி.வான்ஸும் நகரில் இல்லை, அவர் கெண்டக்கி மாநிலம் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.

அதனால், சம்பவத்திற்குப் பிறகு வெள்ளை மாளிகையின் செயல்பாடு முடக்கி வைக்கப்பட்டது.

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை உள்துறைப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயெம் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து மேல் விவரங்களைத் திரட்ட உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து தமது துறை பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

உள்ளூர் நேரம் புதன்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் வியாழன் அதிகாலை 3.15 மணி) இரு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும் சிறுபிள்ளைகளும் இதர மக்களும் ஓடுவதைக் கண்டதாகவும் வெள்ளை மாளிகை அருகே வாடகை வாகனத்தில் இருந்த ஸ்டேஸி வாட்டர்ஸ் என்னும் 43 வயதுப் பெண்மணி ஊடகங்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்