ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை; சகோதரர்கள் இருவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
d0ef6728-4f55-4950-9758-aca0f5855c26
இந்திய மாணவர் கொலை தொடர்பில் இவ்விரு சகோதரர்களையும் ஆஸ்திரேலியக் காவல்துறை கைதுசெய்துள்ளது. - படம்: விக்டோரியா மாநிலக் காவல்துறை

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் 22 வயது இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்குத் தொடர்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

ராபின் கார்ட்டன், 27, அபிஜீத் அபிஜீத், 26, என்ற அவர்கள் இருவரும் நியூ சௌத் வேல்சில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 7) கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நவ்ஜீத் சந்து என்ற ‘எம்.டெக்.’ மாணவர், மெல்பர்னின் தென்கிழக்கிலுள்ள ஆர்மண்டில் உள்ள ஒரு வீட்டில் கொல்லப்பட்டார். அவருடைய 30 வயது நண்பர் ஒருவரும் காயமுற்றார்.

இந்நிலையில், வியாழக்கிழமையன்று கார்ட்டன்மீது கொலை, கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் அபிஜீத்மீது உடந்தையாய் இருந்ததற்கான குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.

கோல்பர்ன் நீதிமன்றம் அவர்களை விக்டோரியாவிற்குக் கொண்டுசெல்ல அனுமதித்ததை அடுத்து, வெள்ளிக்கிழமையன்று இருவரும் மெல்பர்ன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.

வாடகை தொடர்பாக இந்திய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நவ்ஜீத்தை இன்னொரு மாணவர் கத்தியால் குத்திக் கொன்றதாக அவரின் உறவினர் யஷ்வீர் தெரிவித்தார். நவ்ஜீத், ஹரியானா மாநிலம், கர்னாலைச் சேர்ந்தவர்.

குறிப்புச் சொற்கள்