தோக்கியோ: சீனாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள டாலியான் நகரில் ஜப்பானியர் இருவர் கொலை செய்யப்பட்டதாக பெய்ஜிங்கில் உள்ள ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன் தொடர்பில், சந்தேகத்துக்குரிய சீன ஆடவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) அது கூறியது.
கொலை செய்யப்பட்ட இருவரும் ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மே 25ஆம் தேதி, ஷென்யாங்கில் உள்ள ஜப்பானியத் துணைத் தூதரகத்திற்குச் சீன அதிகாரிகள் தகவல் அளித்தனர். வர்த்தகம் தொடர்பான சர்ச்சை கொலைக்கான காரணம் என்று கூறப்பட்டது.
முன்னதாக, சென்ற ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் சீனாவின் தென்பகுதி நகரான ஷென்சென்னில் 10 வயது நிரம்பிய ஜப்பானிய மாணவன் சீன ஆடவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
2024 ஜூன் மாதத்தில் சுசோவில் உள்ள ஜப்பானியப் பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் சீனப் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். சீன ஆடவர் நடத்திய அந்தத் தாக்குதலில் ஜப்பானியத் தாயாரும் அவரது குழந்தையும் காயமடைந்தனர்.
குற்றம் செய்த ஆடவர் இருவருக்கும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தனித்தனியே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

