பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் மூவர் மரணம், 36 பேருக்குக் காயம்

பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் மூவர் மரணம், 36 பேருக்குக் காயம்

2 mins read
1efa9608-2919-4728-8d4b-9b41dbb69939
ஜூன் 9ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் இவ்விபத்து நடந்ததாக மலேசியக் காவல்துறை தெரிவித்தது. - படம்: பெர்னாமா

ரோம்பின்: மலேசியாவின் பாகாங் மாநிலத்திலுள்ள ரோம்பின் வட்டாரத்தில் ஜூன் 9ஆம் தேதி அதிகாலையில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் காயமடைந்தனர்.

ஜாலான் குவாந்தான் - செகாமட்டில் பகாவ் சாலைச் சந்திப்புக்கு அருகே அதிகாலை 1.30 மணியளவில் இவ்விபத்து நேர்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

பேருந்தில் இரண்டு ஓட்டுநர்களுடன் 39 பேர் பயணம் செய்ததாகவும் அது கட்டுப்பாட்டை இழந்து, இரும்புச் சுருள்களை ஏற்றிச் சென்ற லாரியில் மோதியதையடுத்து தலைகீழாகக் கவிழ்ந்ததாகவும் கூறப்பட்டது.

மலாக்காவில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் அவர்களின் குழந்தைகளும் அந்தப் பேருந்தில் பயணம் செய்தனர். அவர்கள் திரங்கானு சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

விபத்தில் ஹஸ்னாதுல் அடிலா ஹசான் எனும் 48 வயது ஆசிரியர் சம்பவ இடத்திலேயே மாண்டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் பேருந்தின் இரண்டாவது ஓட்டுநரான 29 வயது முகமது அடி ஹாசன் மாண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஓர் ஆசிரியர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஹம்சா அகமது எனப்படும் அந்த ஆசிரியருக்கு வயது 60.

முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து லாரியில் மோதி பின்னர் சாலையோரச் சரிவில் கவிழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

லாரி ஓட்டுநருக்குக் காயமேதும் ஏற்படவில்லை.

காயமடைந்தவர்கள் குவந்தானில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் யாருமிருந்தால் தகவல் தரும்படிக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர்கள் மாண்ட இந்த விபத்து குறித்துத் தமது அமைச்சு முழுமையான அறிக்கையைக் கோரியிருப்பதாக மலேசியக் கல்வி அமைச்சர் ஃபாத்லினா சைதெக் கூறியுள்ளார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் நலனைக் கட்டிக்காக்கவும் அமைச்சு ஆன அனைத்து வகைகளிலும் முயலும் என்றி அவர் கூறியதாக மலேசியாகினி.காம் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாலாரிபேருந்துவிபத்துஉயிரிழப்பு