பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; இருவர் உயிரிழப்பு

பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; இருவர் உயிரிழப்பு

2 mins read
49d2e0fb-05b1-42f8-8cb4-e6b73194c918
துப்பாக்கிச்சூடு நடந்த பள்ளிக்கு வெளியே பதற்றத்துடன் திரண்ட பொதுமக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

மணிலா: பிலிப்பீன்சின் தென்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

இத்தகைய சம்பவம் அங்கு நடந்திருப்பது கடந்த இரு மாதங்களில் இது இரண்டாவது முறை.

இச்சம்பவம் அட்டெனியோ டி ஸாம்பவொங்கா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பள்ளியில் காலை மணி 7.50க்கு நடந்தது. நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக ஸாம்பவொங்கா நகர மேயர் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளியில் சக்திவாய்ந்த துப்பாக்கியையும் கைத்துப்பாக்கியையும் பயன்படுத்திச் சுட்டதில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார். பின்னர் தாக்குதல் நடத்திய மாணவர் தன்னைத்தானே சுட்டு, உயிரை மாய்த்துக்கொண்டார்.

சம்பவத்தை நேரலையாக ஒளிபரப்ப அவர் தனது உடலில் படக்கருவி ஒன்றைப் பொருத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அங்கு வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் வேறு எந்த உயிருடற்சேதமும் ஏற்படவில்லை என்றும் பல்கலைக்கழகத் தலைவர் தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மை நோக்கம் என்று தெரிவித்த பல்கலைக்கழக நிர்வாகம், வகுப்புகளை உடனடியாக ரத்துச் செய்தது. மேலும், ஆகஸ்ட் 19ஆம் தேதியைத் துக்க நாளாகவும் பிரார்த்தனை நாளாகவும் அது அறிவித்துள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் தேவையில்லாத நிழற்படங்களையும் காணொளிகளையும் பரப்புவதைத் தவிர்க்குமாறு ஸாம்பவொங்கா நகராட்சி பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஜூன் மாதம் தக்லோபான் நகரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டனர்; கிட்டத்தட்ட 20 பேர் காயமடைந்தனர்.

அண்மையில் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்பள்ளிதுப்பாக்கிச்சூடுமாணவர்