ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் காவல்துறையினருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையிலான துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட ஆடவர்களில் ஒருவர் மீது கிட்டத்தட்ட 40 குற்றப் பதிவுகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
இச்சம்பவம் ஜூன் 15ஆம் தேதி மாலை 5.04 மணிக்கு ஜாலான் அபாத்தில் நடந்ததாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம்.குமார் கூறினார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் ஜோகூர் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (டி9) அதிகாரிகளும் சந்தேகத்துக்குரிய முறையில் சென்றுகொண்டிருந்த வெள்ளை காரைப் பின்தொடர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“பின்தொடரைப்படுவதை உணர்ந்ததும் சந்தேக நபர்கள் தப்பிக்க முயன்றனர். காவல்துறையினரை நோக்கி அவர்கள் சுட்டனர்.
“நிலைமை பாதுகாப்பாகும் வரை காவல்துறையினர் திருப்பிச் சுட நேர்ந்தது,” என்று திரு குமார் ஜூன் 15ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த காரை சோதித்ததில் சந்தேக நபர்கள் இருவரும் கொல்லப்பட்டதைக் கண்டறிந்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த காரில் இரு துப்பாக்கிகள் காணப்பட்டன. ஒரு துப்பாக்கி சந்தேக நபர் ஒருவரின் சடலம் மீது இருந்தது. மேலும், போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்களும் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சந்தேக நபர்களில் ஒருவர் 42 வயது ஆடவர் என்றும் அவர் மீது 38 குற்றச்செயல்களில் தொடர்பிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் திரு குமார் கூறினார். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.
“இரண்டாவது சந்தேக நபரின் அடையாளம் இன்னும் உறுதியாகவில்லை. ஏனெனில் அவர் சடலத்தின் மீது அடையாள ஆவணங்கள் ஏதும் காணப்படவில்லை,” என்று திரு குமார் குறிப்பிட்டார்.
குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 307ஆம் பிரிவின்கீழ், இது கொலை முயற்சிச் சம்பவமாக விசாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தகவலறிந்தோர் விசாரணையில் உதவ முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார். அவர்கள், ஜோகூர் காவல்துறையை 019-2792095 எனும் நேரடித் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். அல்லது அதன் தளபத்திய நிலையத்தை 07-221299 என்ற எண்ணில் அழைக்கலாம்.