உக்ரேன்மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்

1 mins read
705d8439-d51f-4e1e-a79b-fb3b5ea7d25a
உக்ரேனை வாட்டி வதைக்கும் கடும்பனிப்பொழிவுக்கிடையே ரஷ்யா இவ்வான் தாக்குதலை நடத்தியது. - படம்: ராய்ட்டர்ஸ்

கியவ்: ரஷ்யா திங்கட்கிழமை அதிகாலை உக்ரேனின் பெரும்பான்மையான பகுதிகள்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்களைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாகவும் குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகங்களைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரேனின் தென் மத்திய நகரமான கிரிவ் ரீயில் வணிக வளாகம் ஒன்றும், 20க்கும் மேற்பட்ட தனியார் கட்டடங்களும் இத்தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக அந்நகர ஆளுநர் செர்ஹி லிசாக் தெரிவித்தார். அந்நகருக்கு வெளியே 62 வயதான ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்களை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக டெலிகிராமில் திரு லிசாக் கூறினார்.

உக்ரேன் முழுவதும் திங்கட்கிழமை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வான் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உக்ரேனில் நிலவும் கடும் பனிப்பொழிவுக்கிடையே இத்தாக்குதல்கள் நடந்தன.

அண்மை வாரங்களாக ரஷ்யா, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அது ஆக்கிரமித்த பகுதிக்கு வெகு தொலைவில் அமைந்துள்ள உக்ரேனிய மக்கள் நிலையங்கள்மீது வான்வழித் தாக்குதல்களை மீண்டும் நடத்த தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்