மெர்சிங்: மலேசியாவின் ஜோகூர் மாநிலம், மெர்சிங்கில் உள்ள மவார் தீவின் கடற்கரைக்கு அருகே சிங்கப்பூரர் ஒருவர் உட்பட ஆடவர்கள் இருவர் நீரில் மூழ்கியது கண்டறியப்பட்டது.
திங்கட்கிழமை (ஏப்ரல் 7) பிற்பகல் கடற்கரை நீரில் நீச்சலில் ஈடுபட்டிருந்தபோது பலத்த அலை வீசியதில் அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் மூன்று நண்பர்கள் சம்பந்தப்பட்டதாக எண்டாவ் தீயணைப்பு, மீட்பு நிலையம் கூறியது. சிங்கப்பூரர் யோகராஜ் வீரன், 37, இந்திய நாட்டவர் நாராயணன் ரவி, 45, மலேசியர் கே.அன்பானந்தன் ஆகியோர் அந்த மூவர்.
திங்கட்கிழமை மாலை 4.50 மணியளவிலிருந்து காணாமல்போனதாகக் கூறப்பட்ட நாராயணன், மவார் தீவிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.
கடற்கரை அருகே சுயநினைவின்றி நீரில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட யோகராஜ், பொதுமக்கள் சிலரால் கரைக்குக் கொண்டுவரப்பட்டார். இச்சம்பவத்தில் அவர் உயிர்பிழைக்கவில்லை. அன்பானந்தன் ஒருவழியாக தன் உயிரைக் காப்பாற்றிக்கொண்டார்.
திங்கட்கிழமை மாலை 6.21 மணிக்கு மீட்பு நடவடிக்கை நிறைவுற்றது.
இந்நிலையில், இறந்த இருவரின் உடல்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எண்டாவ் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் முகம்மது அலியாஸ் ஹுசேனை மேற்கோள்காட்டி பெர்னாமா ஊடகம் செய்தி வெளியிட்டது.

