ஜோகூர் பாரு: நோன்புப் பொருநாள் விடுமுறைக் காலத்தின்போது ஜோகூருக்குள் இரண்டு மில்லியன் வாகனங்கள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் கடற்பாலம் மற்றும் இரண்டாம் பாலம் ஆகியவற்றின் வழியாக ஜோகூருக்குள் நுழையும் வாகனங்களும் அதில் அடங்கும்.
நோன்புப் பெருநாள் விடுமுறைக் காலத்தில் வழக்கமான நாள்களைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான வாகனங்கள் ஜோகூருக்குள் நுழையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில காவல்துறை தலைமை அதிகாரி எம். குமார் தெரிவித்துள்ளார்.
வார இறுதி விடுமுறையில் ஜோகூர் கடற்பாலத்திலும் இரண்டாம் பாலத்திலும் அதிகமான போக்குவரத்து இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனால், நெரிசல் மிகுந்த 47 இடங்களும் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ள 36 இடங்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், விடுமுறை காலத்தின்போது அவற்றின் மீது அதிகக் கவனம் செலுத்தப்படும் என்றார்.
ஜோகூர் அரச மலேசிய காவல்துறை அலுவலகத்தில் திரு குமார் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) செய்தியாளர்களிடம் பேசினார்.
பாதுகாப்புப் பணியில் 1,998 காவல்துறை பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். அவர்களில் 251 அதிகாரிகளும் 1,747 பணியாளர்களும் அடங்குவர். வடக்கு-தெற்கு விரைவுச்சாலை அலுவலகங்களைச் சேர்ந்த அவசரகால சமாளிப்புக் குழுவும் அவர்களுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.