கோலாலம்பூர்: கடந்த வார இறுதியில் பினாங்குத் தீவுப் பகுதியில், சட்டவிரோதமாக ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு சுமார் 700,000 லிட்டர் டீசலைக் கடத்தியதாகக் கூறப்படும் இரண்டு எண்ணெய்க் கப்பல்களை மலேசியக் கடல்துறை அமலாக்க அமைப்பு (எம்எம்இஏ) தடுத்து வைத்துள்ளது.
மத்திய கிழக்குப் போர் காரணமாக, இவ்வட்டாரம் முழுவதும் அதிகரித்து வரும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், மலேசியா எரிபொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏப்ரல் 11ஆம் தேதி பாகான் அஜாம் கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்த கப்பல்கள் குறித்த உளவுத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டதாகப் பினாங்கு எம்எம்இஏ இயக்குநர் முஹம்மது சுஃபி முகமது ராம்லி தெரிவித்தார்.
“ஆய்வின்போது, இரண்டு கப்பல்களும் இணைக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதியின்றி அக்கப்பல்களுக்கு இடையே எண்ணெய்ப் பரிமாற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றதாகச் சந்தேகிக்கப்பட்டது,” என்று அவர் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தப் பரிமாற்றத்தில் சுமார் 700,000 லிட்டர் யூரோ 5 டீசல் சம்பந்தப்பட்டுள்ளது என்றும், கைப்பற்றப்பட்ட மொத்த அளவு சுமார் 800,000 லிட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், அதன் மதிப்பு சுமார் 5.43 மில்லியன் ரிங்கிட் (S$1.74 மில்லியன்) என்றும் அவர் கூறினார்.
மலேசியா, மியன்மார், ரஷ்யா, பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய 22 கப்பல் பணியாளர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
அந்த எண்ணெய்க் கப்பல்கள் எங்கிருந்து வந்தவை, டீசல் அல்லது எரிபொருள் எங்குக் கொண்டுசெல்லப்பட்டது ஆகியவற்றை எம்எம்இஏ குறிப்பிடவில்லை.
மலேசியாவின் கடற்பரப்புகள், கடலில் உள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு இடையில் சட்டவிரோதமாக எண்ணெய்ப் பரிமாற்றம் செய்யப்படும் வழக்கமான இடமாக அறியப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
மலேசிய அதிகாரிகள் ஜூலை 2025ல், இது தொடர்பான விதிகளை இன்னும் கடுமையாக அமல்படுத்துவதாகக் கூறினர்.
இவ்வாண்டு பிப்ரவரியில், இதேபோன்ற ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்குக் கச்சா எண்ணெய் பரிமாற்றம் செய்ததற்காக, பினாங்கு எம்எம்இஏ இரண்டு எண்ணெய்க் கப்பல்களைத் தடுத்து நிறுத்தியது. இருப்பினும், கூடுதல் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அந்தக் கப்பல்கள் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

