மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இலக்கு வைத்து உக்ரேன் இரவோடு இரவாக 400 ஆளில்லா வானூர்திகளை (டிரோன்) அனுப்பித் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் திங்கட்கிழமை (ஜூலை 20) தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். கட்டடங்கள் சில தீப்பற்றி எரிந்தன.
மாஸ்கோ நகரை நோக்கி வந்த 85 ஆளில்லா வானூர்திகள் உட்பட பெரும்பாலானவை வான்வெளித் தற்காப்புக் கட்டமைப்பால் தாக்கி அழிக்கப்பட்டதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோப்யானின் கூறினார்.
ரஷ்ய எல்லைப் பகுதிகள், கருங்கடல் பகுதிக்கு மேல் பறந்த 381 உக்ரேனிய ஆளில்லா வானூர்திகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
வடகொரியா -ரஷ்யா சந்திப்பு
இவ்வேளையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோய் சன் ஹூயை கிரெம்ளின் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சந்திப்பின்போது, ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உறுதியளித்துள்ளதாக சோய் சன் ஹூ கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தற்காப்பு ஒப்பந்தத்தின் கீழ், குர்ஸ்க் பகுதியில் ரஷ்யப் படைகளுடன் இணைந்து போராட வடகொரியா கிட்டத்தட்ட 14,000 வீரர்களை அனுப்பியிருந்தது.

