கேன்சஸ் சிட்டி: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியிடமிருந்து 18,000 அமெரிக்க டாலர் (S$23,120) மதிப்புள்ள விளையாட்டு உடைகளையும் உபகரணங்களையும் திருடியதாக இருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (ஜூன் 13) அவர்கள்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஜேக்சன் கவுன்டி அரசுத் தரப்பு வழக்கறிஞர் மெலிசா ஜான்சனின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, முஸ்தபா சாலிக், இர்ஃபான் கமால் இருவரும் பொருள்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகின்றனர்.
ஃபுளோரிடாவில் உள்ள இங்கிலாந்து அணியின் பயிற்சி முகாமிலிருந்து கேன்சஸ் சிட்டியில் உள்ள உலகக் கிண்ணத் தளத்திற்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டபோது அவற்றிலிருந்த உபகரணங்கள் திருடப்பட்டன.
“உலகக் கிண்ணப் போட்டிகளைக் காண வருவோரையோ இங்குப் போட்டியிட வந்துள்ள அணிகளையோ குறிவைத்து நடத்தப்படும் எந்தவொரு குற்றச்செயல்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று திருவாட்டி மெலிசா எச்சரித்தார்.
இந்தத் திருட்டுச் சம்பவத்தின் விசாரணையை விரைவாக முடித்து, பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை மீட்க உதவியதற்காக கேன்சஸ் சிட்டி மேயர் குயிண்டன் லூகாஸ், காவல்துறைக்கும் வழக்கறிஞர் அலுவலகத்திற்கும் தமது பாராட்டைத் தெரிவித்துக்கொண்டார்.

