காத்மாண்டு: நேப்பாளத்தின் இரு மிகப் பிரபல அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை அறிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணி அமைக்கப்பட்டது, நேப்பாளத்தில் நீண்டகாலமாகக் கோலோச்சிவரும் கட்சிகளுக்குப் பெருஞ்சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ராஸ்திரியா சுவதந்திரா கட்சித் தலைவரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான 51 வயது ரபி லமிச்சானே, காத்மாண்டு மேயர் பலேந்திரா ஷா ஆகியோர் கைகோத்துள்ளனர்.
நேப்பாள அரசாங்கத்தைக் கவிழ்க்கும் அளவுக்கு ஊழலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த இளையர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக தலைவர்கள் இருவரும் உறுதிகூறினர்.
ராஸ்திரியா சுவதந்திரா கட்சியின் துணைத் தலைவர் திரு சுவர்னிம் வாகல், நேப்பாளம் மார்ச் 5ஆம் தேதிக்கான தேர்தலுக்குத் தயாராகும் வேளையில் புதிய கூட்டணி, துணிச்சல், தியாகம், நம்பிக்கை ஆகியவற்றின் அரிய கலவை என்று வருணித்தார்.
“நாட்டிற்கு முதலிடம் கொடுத்து புதிய தலைமுறைத் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளர். நேப்பாள இளையர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தலைவர்கள் உள்ளனர்,” என்றார் திரு வேகல்.
இந்நிலையில், திரு லமிச்சானே கட்சியின் தலைவராக நீடிப்பார். ராப் இசைப் பாடகராக இருந்து பின் மேயராக மாறிய 35 வயது திரு ஷா, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்.
‘பாலென்’ என்று அழைக்கப்படும் திரு ஷா, அரசியல் உருமாற்றத்தில் ஒரு முக்கிய நபராகப் பார்க்கப்படுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
கே.பி. ஷர்மா ஒலியின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து திருவாட்டி சுஷிலா கார்கி நடத்திய இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க திரு ஷா உதவினார்.

