ஜோகூர் கடைத்தொகுதிக்கு வெளியே சிகரெட் துண்டுகளை வீசியதற்காக சிங்கப்பூரர்கள் இருவருக்கு அபராதம், சமூக சேவை உத்தரவு

ஜோகூர் கடைத்தொகுதிக்கு வெளியே சிகரெட் துண்டுகளை வீசியதற்காக சிங்கப்பூரர்கள் இருவருக்கு அபராதம், சமூக சேவை உத்தரவு

1 mins read
b177536a-2907-4916-af56-68470c602dac
ஜனவரி 3ஆம் தேதி காலை 11 மணிக்கஉம் 11.11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஜோகூர் பாருவில் உள்ள கேஎஸ்எல் சிட்டி கடைத்தொகுதியின் நுழைவாயிலுக்கு முன்னால் சிங்கப்பூரர்களான லிம் ஹு ஷென், டான் பூன் ஹாவ் ஆகிய இருவரும் சிகரெட் துண்டுகளை வீசினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள கடைத்தொகுதிக்கு வெளியே சிகரெட் துண்டுகளை வீசியதற்காக சிங்கப்பூரர்கள் இருவருக்குத் தலா 1,000 ரிங்கிட் அபராதமும் ஆறு மணி நேரச் சமூக சேவை செய்யும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை லிம் ஹு ஷென், டான் பூன் ஹாவ் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டனர். இருவருக்கும் 38 வயது.

ஆறு மாதங்களுக்குள் ஒருநாளுக்கு இரண்டு மணி நேரம் என ஆறு மணி நேரத்துக்குச் சமூக சேவை செய்ய வேண்டும் என்று கட்டடக்கலைஞரான லிம்முக்கும் திட்ட மேலாளரான டானுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறினால் இருவரும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜனவரி 3ஆம் தேதி காலை 11 மணிக்கும் 11.11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஜோகூர் பாருவில் உள்ள கேஎஸ்எல் (KSL) சிட்டி கடைத்தொகுதியின் நுழைவாயிலுக்கு முன்னால் இவ்விருவரும் சிகரெட் துண்டுகளை வீசினர்.

குறிப்புச் சொற்கள்