ஜோகூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பொது இடங்களில் குப்பைகளைப் போட்டதற்காக இரண்டு சிங்கப்பூரர்கள் உட்பட 16 பேர் சமூகப் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
சிகரெட் துண்டுகள், பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட பொருள்களை வீசியதற்காக அந்த 16 பேரும் தண்டிக்கப்படுகிறார்கள் என்று ஜோகூரின் தூய்மை மேலாண்மை கழகத்தின் இயக்குநர் சைனுல் அகமது தெரிவித்தார்.
தண்டனையை எதிர்நோக்கும் நபர்கள் ஜோகூர் பாருவில் உள்ள கடைத்தொகுதியில் இருக்கும் கார் நிறுத்துமிடங்களில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று திரு சைனுல் குறிப்பிட்டார்.
பொது இடத்தில் குப்பை போடுபவர்களை மலேசிய அரசாங்கம் தண்டித்து வருகிறது. இது அந்த மாநிலத்தில் இடம்பெறும் ஏழாம் கட்ட சமூகப் பணி உத்தரவு.
“16 பேரில் எட்டுப் பேர் மலேசியர்கள், மூன்று இந்தோனீசியர்கள், இரண்டு பங்ளாதேஷிகள், ஒரு நேப்பாளக் குடிமகன், இரண்டு சிங்கப்பூரர்கள். அவர்கள் சிறிய அளவிலான குப்பைகளைப் பொது இடத்தில் போட்டனர்,” என்று திரு சைனுல் ஞாயிற்றுக்கிழமை (மே 10) நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
16 பேருக்கும் தலா 2,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

