வட கரோலினா துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: பதின்ம வயதினர் இருவர் மரணம்

வட கரோலினா துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: பதின்ம வயதினர் இருவர் மரணம்

2 mins read
மேலும் ஐவர் காயம் எனக் காவல்துறை தகவல்
671ad601-4d42-4827-a0fa-bdae17dd047d
ஏப்ரல் 20ஆம் தேதி காலை 10 மணி வாக்கில், பள்ளிக்கு அருகிலிருந்த பூங்காவில் இளையர்களுக்கிடையே நடந்த சண்டை குறித்துத் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் கூறினர். - படம்: வட கரோலினா மாநிலப் புலன் விசாரணைப் பிரிவு, ஃபேஸ்புக்

வின்ஸ்டன்-சேலம்: அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பதின்ம வயதினர் இருவர் உயிரிழந்ததாகவும் மேலும் ஐவர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம், ரேலே நகருக்கு வடமேற்கே ஏறத்தாழ 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வின்ஸ்டன்-சேலத்தின் லெயின்பாக் சமூகப் பூங்காவில் நடந்தது.

பாதிக்கப்பட்ட இளையர்கள் ‘முன்கூட்டியே திட்டமிடப்பட்ட’ அச்சண்டையில் பங்கேற்றவர்கள் அல்லது அதை வேடிக்கை பார்ப்பதற்காக அங்குக் கூடியவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

சண்டை மூண்டது தொடர்பில் விசாரணை நடைபெற்றுவருகிறது. சந்தேகத்துக்குரிய யாரும் தடுப்புக் காவலில் இல்லை என்று காவல்துறை திங்கட்கிழமை (ஏப்ரல் 20) செய்தியாளர்களிடம் தெரிவித்தது.

இந்தச் சண்டையில் சமூக ஊடகம் முக்கியப் பங்கு வகித்ததாக உள்ளூர்க் காவல்பிரிவுத் தலைவர் வில்லியம் எச்.பென் ஜூனியர் கூறினார். சண்டைகளில் பதின்ம வயதினர், இளம் பிள்ளைகளின் நடத்தையைச் சமூக ஊடகம் மாற்றிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நடுநிலைப் பள்ளி ஒன்றின் அருகே அமைந்திருக்கும் பூங்காவில் காலை 10 மணிவாக்கில் இளையர்கள் சண்டையிட்டுக் கொள்வதாகத் தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் அதிகாரிகள் அங்குச் செல்லும் வேளையில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக மேலும் அழைப்புகள் வந்ததாகவும் கூறப்பட்டது.

சம்பவத்தில் எருபே ரொமேரோ மெடினா, 17, டேனியல் ஜிமெனெஸ் மில்லியன், 16, எனும் இளையர்கள் சுடப்பட்டனர். இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

காயமடைந்த மேலும் ஐவரில் சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை கூறியது. அவர்களில் ஒருவர் 18 வயது ஆடவர் என்றும் மற்றவர்கள் முறையே 14, 15, 17, 19 வயதுப் பெண்கள் என்றும் கூறப்பட்டது. காவல்துறை அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை.

இச்சம்பவத்தில் குண்டர் கும்பல்களுக்குத் தொடர்பில்லை என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்