பாரிஸ்: கிறிஸ்துமஸுக்கு முன்பு தமது அரசாங்கத்தை அமைக்க தடுமாறிவரும் பிரான்சின் புதிய பிரதமர் ஃபிரான்சுவா பேரோவுக்கான மக்கள் ஆதரவு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது.
பிரெஞ்சு வாரயிதழான du Dimanche-க்காக சந்தை ஆய்வு நிறுவனமான லஃபோப் (Ifop) நடத்திய புதிய கருத்தாய்வில், தமது பணியை பிரதமர் முறையாக தொடங்குவதற்குள், அவரின் செயல்பாடு குறித்து 66 விழுக்காட்டினர் அதிருப்தி கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் மீது வெறும் 34 விழுக்காட்டினர் திருப்தி அல்லது மிகவும் திருப்தி கொண்டுள்ளனர்.
1959 வரை பின்னோக்கிச் செல்லும் அந்தக் கருத்தாய்வு நிறுவனம், புதிதாக பதவியேற்ற பிரதமர் ஒருவருக்கு ஆதரவு இவ்வளவு குறைவாக இருந்ததை தான் கண்டறிந்ததில்லை என்றது.
டிசம்பர் 11 முதல் 18 வரை பிரெஞ்சு மக்கள்தொகையில் 2,004 பேர் இந்தக் கருத்தாய்வில் பங்கெடுத்தனர்.
அதிபர் இமானுவெல் மெக்ரோனின் ஆட்சியில் ஆறாவது பிரதமரும் 2024ன் நான்காவது பிரதமரும் ஆவார் திரு பேரோவ். ஒவ்வொரு பிரதமரும், கடைசியாக பதவியில் இருந்த பிரதமரைவிட குறுகிய காலத்துக்கே ஆட்சி செய்துள்ளனர்.
திரு பேரோவுக்கு முன்பு பதவியில் இருந்த மிஷல் பார்னியே, பிரான்சின் ஆகக் குறுகியகால பிரதமராக இருந்தார். அவர் வெறும் மூன்று மாதங்களுக்கே அப்பதவியில் தாக்குப்பிடித்தார்.
டிசம்பர் 13ஆம் தேதி பிரதமராக நியமிக்கப்பட்ட திரு பேரோவ், தமது அமைச்சரவைத் தெரிவுகளை திரு மெக்ரோனிடம் இன்னும் சமர்ப்பிக்கவில்லை.