சோல்: ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபையில் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உரையாற்றினார். ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் போரிட்டுத் தங்களால் உயிருடன் சிறைபிடிக்கப்பட்ட வடகொரியப் போர்க்கைதிகள் இருவர் தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
அவர்களை உயிருடன் பிடிப்பது எளிதான செயலாக இருக்கவில்லை என்று குறிப்பிட்ட அதிபர் ஸெலென்ஸ்கி, கைதானவர்களில் ஒருவர் பிடிபடுவதை உணர்ந்ததும் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் எனினும் விதி தம்மைச் சாகவிடவில்லை என்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், அவர்களைத் திருப்பி அனுப்பியது தொடர்பான கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை. ரஷ்யாவின் கூர்ஸ்க் பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவ்விரு வடகொரிய வீரர்களையும் உக்ரேனியப் படைகள் சிறைபிடித்தன.
அவர்கள் 2024ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரேன் போரில் வடகொரியா இணைந்ததற்குப் பிறகு, உயிருடன் பிடிபட்ட முதல் வடகொரிய வீரர்கள் ஆவர். ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்டுள்ள உக்ரேனியர்களை மீட்பதற்கு வசதியாக, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னிடம் அக்கைதிகளை ஒப்படைக்கத் தயார் என்று அதிபர் ஸெலென்ஸ்கி முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அப்போர்க்கைதிகள் வடகொரியா திரும்பினால் அங்கு அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்தன.
அதனால், அவர்களைத் தென்கொரியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு மனித உரிமை அமைப்புகள் உக்ரேனை வலியுறுத்தின. மேலும், பிடிபட்ட அவ்விரு வீரர்களும் தென்கொரியாவுக்குத் தப்பியோட விருப்பம் தெரிவித்திருந்ததாகத் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனிடையே, சிறைபிடிக்கப்பட்ட அந்த வடகொரிய வீரர்கள் இருவர் கடந்த வார இறுதியில் உக்ரேனிலிருந்து புறப்பட்டு, மூன்றாவது நாடு வழியாக மூன்று முதல் நான்கு நாள்களுக்கு முன்பு தென்கொரியாவை வந்தடைந்ததாகத் தென்கொரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யூ யோங் வியோன் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) செய்தியாளர்களிடம் கூறியதாக யோன்ஹாப் செய்தி தெரிவித்தது.
