டெஹ்ரான்: காலியாக இருந்த இரண்டு பெருங்கப்பல்கள் (supertankers) ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாரசீக வளைகுடாவுக்குப் போக முயன்றன; ஆனால், கடைசி நேரத்தில் அவ்விரு கப்பல்களும் வந்த திசையிலேயே திரும்பிச் சென்றன.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்துபோனதைத் தொடர்ந்து அக்கப்பல்கள் திரும்பிப் போக நேரிட்டது.
தற்போது நடப்பில் இருக்கும் போர்நிறுத்தம் எந்நேரமும் முடிவுக்கு வரக்கூடும் என்ற அச்சம் தொடரும் சூழலில் பேச்சுவார்த்தை முறிந்தது.
எண்ணெய் ஏந்திச் செல்வதற்கான மூன்று பெருங்கப்பல்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 11) பின்னிரவு ஓமான் வளைகுடாவிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை நோக்கிச் சென்றது கப்பல்களைக் கண்காணிக்கும் புள்ளிவிவரங்களில் தெரிந்தது. அவை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரானின் லராக் தீவுக்கு அருகே சென்றன.
ஆனால், ஈராக்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அகியோஸ் ஃபனூரியொஸ் 1, பாகிஸ்தான் கொடியைக் கொண்ட ஷலாமார் ஆகிய கப்பல்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றன. ஷலாமார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உள்ள தாஸ் தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
மூன்றாவது கப்பலான மொம்பாசா பி, லாரான் மற்றும் கெஷம் தீவுகளுக்கு நடுவே, ஈரான் அனுமதி அளித்திருக்கும் பாதைவழி பாரசீக வளைகுடாவுக்குச் சென்றது. அக்கப்பல் எங்குச் செல்கிறது என்று தெளிவாகத் தெரியப்படுத்தப்படவில்லை.
இரண்டு கப்பல்கள் திரும்பிச் சென்றதற்கும் மூன்றாவது கப்பல் பயணத்தைத் தொடர்ந்ததற்குமான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஈராக்குக்கும் பாகிஸ்தானுக்கும் ஈரான் அனுமதி அளித்திருந்தது.
எனினும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எட்டப்படாததையடுத்து இரு கப்பல்கள் திரும்பிச் சென்றன.
தொடர்புடைய செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை, உலகளவில் எரிசக்தி விநியோகத்துக்கான ஆக முக்கியப் பாதையாகும். ஆறு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டிருப்பதால் உலகில் எரிசக்தி விநியோகத்தில் இதுவரை இல்லாத அளவு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அந்த நீரிணையைத் திறப்பது, அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால், ஆகக் கடைசி நிலவரப்படி அதன் தொடர்பில் ஒப்பந்தம் எட்டப்படவில்லை.

