இருசக்கர வாகனத்தில் மருத்துவ உதவி; பேங்காக்கில் அறிமுகம்

இருசக்கர வாகனத்தில் மருத்துவ உதவி; பேங்காக்கில் அறிமுகம்

படம்: ஏசியா நியூஸ் நெட்வொர்க்

18 Jul 2023 - 3:57 pm

1 mins read

பேங்காக்: உயிர்காக்கும் மருத்துவ சேவை வழங்கும் அவசர மருத்துவ உதவி மோட்டார் சைக்கிள் திட்டத்தை பேங்காக் பெருநகர நிர்வாகம் (பிஎம்ஏ) ஜுலை 15ஆம் தேதி தொடங்கியது.

பெஞ்சகிட்டி பூங்காவில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான பிஎம்ஏ எக்ஸ்போவில் பேங்காக் பெருநகரத்தின் ஆளுநர் சாட்சார்ட் சிட்டிபண்ட் இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் முதல்படியாக 50 அவசர மருத்துவ உதவி வழங்கும் மோட்டார் சைக்கிள்களை அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்தத் திட்டம் பேங்காக்கின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மோட்டார் சைக்கிள்களில் உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதை மருத்துவமனைகளில் அவசர மருத்துவ உதவிப் பிரிவில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் ஓட்டுவார்கள்.

நான்கு சக்கர அவசர உதவி வாகனங்கள் செல்லமுடியாத போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்திற்குக் கூட இந்த மோட்டார் சைக்கிள்கள் செல்லும்.

“அவசர மருத்துவ உதவி தேவைப்படும் இடத்திற்கு எட்டு நிமிடங்களுக்குள் இந்த மோட்டார் சைக்கிள்கள் சென்று, பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அவசர மருத்துவ உதவி மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கையை 200ல் இருந்து 300 வரை உயர்த்தவும் முடிவுசெய்துள்ளோம்,” எனத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் திரு.சாட்சார்ட் தெரிவித்தார்.

முதல் கட்டமாக 50 அவசர மருத்துவ உதவி மோட்டார் சைக்கிள்கள் பேங்காக்கின் ஏழு பிரிவுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
மருத்துவம்உதவி