மெல்பர்ன்: வாகனம் மோதி காயமடைந்த கங்காருவுக்கு உதவ முயற்சி செய்த இரண்டு பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
செப்டம்பர் 4ஆம் தேதி மெல்பர்னின் புறநகர்ப் பகுதியான கிரேய்கிபர்னில் உள்ள ஹுயும் நெடுஞ்சாலையில் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். மாலை ஏழு மணியளவில் வழியில் வாகனம் மோதி காயமடைந்த கங்காருவை அவர்கள் கண்டனர். இருவரும் காரை நிறுத்திவிட்டு அதற்கு உதவ முயன்றனர்.
ஆனால் அந்நேரத்தில் வேகமாக வந்த மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர், கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கவனிக்கத் தவறிவிட்டார். அதன் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக அவர் வாகனத்தை வேகமாகத் திருப்பியபோது பெண்கள் மீது மோதிவிட்டது.
முப்பது வயதுகளில் இருந்த ஒரு பெண் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
மற்றொரு பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் இறந்தார்.
இருவரின் அடையாளமும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. விசாரணைக்கு ஓட்டுநர் ஒத்துழைத்து வருவதாக விக்டோரியா காவல்துறை உதவி ஆணையரான கிளென் வியர் கூறினார்.
2025ஆம் ஆண்டில் இதுவரை மாநிலச் சாலைகளில் 203 பேர் விபத்துகளில் இறந்துள்ளதாகக் காவல்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இது, 2024ஆம் ஆண்டின் சாலை விபத்துகளில் மரணமடைந்தோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 11 அதிகம்.
மூன்று பாதசாரிகள், மூன்று மோட்டார் சைக்கிளோட்டிகள், வாகனத்தில் பயணம் செய்த மூவர் உட்பட ஒன்பது பேர் நான்கு நாள்கள் நிகழ்ந்த விபத்துகளில் மாண்டனர் என்றும் திரு வியர் தெரிவித்தார்.

