ஜகார்த்தா: சிங்கப்பூரில் பிறந்த இந்தோனீசியச் செல்வந்தர் லொ டக் குவோங், இந்தோனீசியாவின் முன்னாள் அதிபர் சுசிலோ பம்பாங் யுதயோனோவால் வரையப்பட்டு, ஏலத்திற்கு விடப்பட்ட ஓவியத்தை $386,261 அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார்.
அந்த நெருப்புக் குதிரை ஓவியத்தின் விற்பனையிலிருந்து வரும் நிதி, பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்கும் வசதிகுறைந்த சமூகங்களுக்கும் நன்கொடையாக வழங்கப்படும் என்று திரு சுசிலோவின் மகனான அகுஸ் ஹரிமுர்த்தி யுதயோனோ கூறினார்.
சீன நாள்காட்டியின்படி, இவ்வாண்டு நெருப்புக் குதிரை ஆண்டு.
இந்தோனீசியாவின் செல்வந்தர்களில் ஒருவரான திரு லோ, ‘பிடி பயான் ரிசார்சஸ்’ (PT Bayan Resources) எனும் நிலக்கரிச் சுரங்கப்பணி நிறுவனத்தின் தலைவராவார். 77 வயது வள்ளலான அவரது சொத்தின் நிகர மதிப்பு $20.2 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
கடந்த 2023ஆம் ஆண்டில், லோ டக் குவோங் அறநிறுவனம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளிக்கு $101 மில்லியன் உட்பட, இங்குள்ள கல்வி, சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளுக்கு $127.6 மில்லியன் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு சுசிலோ, உயர்நிலைப் பள்ளியிலிருந்தே ஓவியம் வரைந்து வருகிறார். அவர் கொவிட் கிருமிப்பரவல் காலகட்டத்தில் மீண்டும் அந்தப் பொழுதுபோக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு சுசிலோ, 76, 2004 முதல் 2014 வரை இந்தோனீசிய அதிபராக இருந்தார்.

