தொழிலதிபர் ஜிம்மி லாய்க்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து

தொழிலதிபர் ஜிம்மி லாய்க்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து

1 mins read
c16aecb9-8c05-4d2e-80be-a86d08354b0f
ஹாங்காங் பெருஞ்செல்வந்தர் ஜிம்மி லாய். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

ஹாங்காங்: தொழிலதிபரும் ஜனநாயகக் கொள்கைகள் ஆதரவாளருமான ஜிம்மி லாய்க்கு அளிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஹாங்காங் மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டதாக லாய்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அக்குற்றம் பின்னர் நிரூபிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு ஐந்தாண்டுகளும் ஒன்பது மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் குற்றவாளி என்ற தீர்ப்பும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) ரத்து செய்யப்பட்டன. லாயும் இவ்வழக்கில் மற்றொரு பிரதிவாதியும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

“தங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அவர்கள் மேல்முறையீடு செய்ய நேரம் கொடுத்து, மேல்முறையீட்டு மனுக்களை அனுமதித்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பையும் விதிக்கப்பட்ட தண்டனையையும் ரத்து செய்துள்ளோம்,” என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பை விவரிக்கும் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டனர்.

வர்த்தகக் கட்டடம் ஒன்றின் வாடகை ஒப்பந்த விதிமுறைகளை லாய் மீறினார் என்று தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் மேல்முறையீடு செய்திருந்த மற்றொருவரான 61 வயது வோங் வாய்-கியுங் ஏமாற்றுச் செயலில் ஈடுபட்டார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பும் தண்டனையும் ரத்து செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்