ஆஸ்திரேலியாவை நெருங்கும் சூறாவளி; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

1 mins read
6ab1c82b-eedf-4147-adc1-20fc7a2871da
சூறாவளி காரணமாகக் கடலோரப் பகுதிகளில் பெருமழை பெய்து வருகிறது. சில வட்டாரங்களில் பலத்த காற்றும் வீசி வருகிறது.  - படம்: ராய்ட்டர்ஸ்

பிரிஸ்பேன்: சூறாவளி அல்ஃபிரட் காரணமாக ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அல்ஃபிரட் சூறாவளி சனிக்கிழமை (மார்ச் 8) கரையைக் கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சூறாவளி காரணமாகக் கடலோரப் பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. கடலில் மாபெரும் அலைகளும், சில வட்டாரங்களில் பலத்த காற்றும் வீசி வருகிறது.

இதனால் மின்சாரப் பாதிப்பு, கடற்கரைகளில் மண்ணரிப்பு, விமான நிலையம் மூடல் போன்ற பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கினர்.

சூறாவளி மெதுவாகக் கரையைக் கடப்பதால் நீண்ட நேரம் கனத்த மழை பெய்யும் என்று அதிகாரிகள் அச்சப்படுகின்றனர்.

பிரிஸ்பனின் வடக்குப் பகுதியில் இரண்டாம் நிலை சூறாவளிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஆக அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் பட்டியலில் பிரிஸ்ப்அன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

குவீன்ஸ்லாந்து, நியூ செளத் வேல்ஸ் மாநிலங்களில் இரவு நேரம் காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோமீட்டருக்கு மேல் வீசியதாகக் கூறப்பட்டது. அதே நேரம் கடற்கரையிலிருந்து 200 கீலோ மீட்டர் தொலைவில் சூறாவளி மையம் கொண்டுள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோல்டு கோஸ்ட் பகுதியில் 20,000க்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் இல்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் அடுத்த பொதுத் தேர்தல் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். தற்போது அரசாங்கத்தின் முழுக் கவனமும் சூறாவளியைச் சமாளிப்பதில் மட்டுமே உள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்