தைப்பே: ‘பாடூல்’ சூறாவளி தைவானை நெருங்கும் வேளையில் நூற்றுக்கணக்கானோரைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தீவின் தென்கிழக்குக் கரையோரம் அந்தச் சூறாவளி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலை நோக்கி அமைந்திருக்கும் தைவானின் கிழக்குக் கரைப்பகுதி அடிக்கடி சூறாவளிகளால் பாதிக்கப்படுகிறது.
தென்கிழக்கு வட்டாரத்துக்கு அருகிலுள்ள பகுதிகளில் முந்தைய சூறாவளிகளால் ஏற்பட்ட சேதத்தைச் சீராக்க அதிகாரிகள் திணறும் வேளையில் ‘பாடூல்’ சூறாவளி நெருங்கிக்கொண்டிருக்கிறது.
மணிக்கு 155 கிலோமீட்டர் வேகம் கொண்ட காற்றுடன் நெருங்கும் சூறாவளி, புதன்கிழமை (ஆகஸ்ட் 13) கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹுவாலியன் வட்டாரத்தில் கிட்டத்தட்ட 700 பேரை வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அதிகாரிகள் முயல்கின்றனர். முந்தைய சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து அங்கு இயற்கையான ஏரி ஒன்று ஏற்பட்டது. அதிலிருந்து தண்ணீர் நிரம்பி வழியும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தண்ணீர் வடியக்கூடிய பகுதிகளில் வசிப்போர் அரசாங்க உத்தரவுகளைப் பின்பற்றி அங்கிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி பேரிடர் கட்டுப்பாட்டுக்கான தேசிய அறிவியல், தொழில்நுட்ப நிலைய அதிகாரி வலியுறுத்தினார்.
நிலச்சரிவால் ஏற்பட்ட அந்த நீர்நிலையை அதிகாரிகள் அணுக்கமாகக் கண்காணித்துவருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சூறாவளியால் தைவானின் தென்பகுதியில் அடுத்த சில நாள்களில் 600 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஜூலை மாதம் வீசிய சூறாவளியால் சேதமடைந்த வீடுகளிலிலிருந்தும் குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.